Be prepared to shed skin like a snake to build a multi decade career

Vaa.Manikandan offers an useful tip on how to build a multi decade career in an emerging field.

மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் ‘அடுத்தது என்ன?’ என்றோ அல்லது ‘எதில் அப்டேட் செய்து கொள்வது’ என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள். படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் கவனிக்கப்படும் தொழில் நுட்பம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை குறித்தான ஆராய்ச்சியைத் தொடங்கி அதில் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள் என்று பேசினார்கள். புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் கால கட்டத்தில் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி வார இறுதிகளில் சற்று அதிகப்படியான நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் தெளிவாகப் படித்துவிட முடியும். அதன் பிறகான ஓராண்டு காலம் நாம் கற்றுக் கொண்டவற்றில் நிபுணர் ஆவதற்கான வேலைகளைச் செய்யலாம். பிறகு அந்த நுட்பம் கோலோச்சும் காலம் வரைக்கும் நமக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். அதிகபட்சம் முப்பதாண்டுகள் இந்தத் துறையில் இருப்போமா? இப்படி இரண்டு அல்லது மூன்று முறை பாம்பு சட்டையை உரிப்பது போல உரிக்க வேண்டியிருக்கும்.

இப்படித்தான் கிணறு தோண்ட வேண்டும். இதே போல இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மொபைல் நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சி, சி++ மட்டும்தான் மென்பொருள் என்று நினைக்கிறவர்கள்தான் ‘இனி ஐ.டி அவ்வளவுதான்’ என்று நம்புகிறார்கள். உண்மையில் இனிமேல்தான் ஐ.டியின் அசுரத்தனமான வளர்ச்சி இருக்கப் போகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் ‘இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா’ என்பார். இத்தகைய அரைவேக்காட்டு ஆட்களைப் பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வங்கியில் தொடங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் பணியாளர்களே தேவையில்லாமல் அனைத்துமே தானியங்கி(ஆட்டோமேஷன்) ஆகும் காலம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைக்க, நிரல் எழுத என மென்பொருள் துறையில் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளலாம்- மென்பொருள் துறை எந்தக் காலத்திலும் அழியாது. அது தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதில் வேலை வாங்க வேண்டுமென்றால், தொடர வேண்டுமென்றால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்.